http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 03, 2014



இந்திய சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்தில் இருந்து தீவிரம் அடைந்தது. இருந்தாலும், அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப் பட்டன. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும் விடுதலை வேள்வியில் இறங்கியவர். 

இந்தியாவில் சிதறிப் போய்க் கிடந்த அரசர்களையும் குறுநில மன்னர்களையும் சூழ்ச்சி செய்து ஒட்டுமொத்த இந்தியாவையே ஆங்கிலேயர்கள் சூறையாடினார்கள். 

தீரன் சின்னமலை அஞ்சல்தலை
தீரன் சின்னமலை அஞ்சல்தலை
இறுதியாக அத்தனை இந்தியர்களையும் அடிமைப் படுத்தினார்கள். அது வரலாறு. பொறுக்க முடியாமல் ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன் தீரன் சின்னமலை. கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டவர் தீரன் சின்னமலை. வரலாற்று வீரனான தீரன் சின்னமலைக்கு இந்த இணையதளம் சிரம் தாழ்த்துகிறது.

    மாபெரும் போர் வீரன் - கொங்கு
    மண்ணுக்கு அதி காரன் - அந்த
    நாளில் ஆங்கில ஆதிக்கம் எதிர்த்த
    நாயகன் சின்னமலை - அவன் போல்
    நாட்டில் எவருமில்லை!

    ஊருக்குத் தெரியாது - இந்த
    உலகமும் அறியாது - எங்கள்
    தீரன் சின்னமலை சரித்திரம் என்பது
    வாள்முனை  யின்பாட்டு - வெற்றி
    வேலின் விளை யாட்டு!

    பாளையக்காரரை ஒன்றினைத்தே - நல்ல
    பட்டாள வீரரை முன்னிறுத்தி
    கோழைத் துரையின் தலையினைக் கொய்ததில்
    குங்குமம் இட்டவன் சின்னமலை!

    மேழி பிடித்துழுவார் - இந்த
    மேதினி பசிதீர்ப்பார் -  கொங்கு
    வேளாளர் இனத்தில் சர்க்கரை  மரபில்
    பிறந்த ஒளிக்கீற்று - சீறி
    வெடித்த புயல் காற்று!

    கொங்கினை ஆளப் பிறந்தவனாம் - செழுங்
    கோவைக் கோனாகச் சிறந்தவனாம்
    சிங்க மெனவெள்ளைக் கும்பலில் பாய்ந்திடும்
    சின்ன மலைபுகழ் பாடிடுவோம்!
மாவீரன் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

வரலாறு

ஈரோடு மாவட்டத்தில் காங்கயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி. தாயார் பெயர் பெரியாத்தா. இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி. இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூறப் படுகிறது. இதனால் இவர் இளம் பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியைச் சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார். கொங்கு நாடு அப்பொழுது மைசூர் ஆட்சியில் இருந்தது. கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, மைசூர் அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுத்தார். வரிப் பணத்தைக் கொண்டு சென்ற தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை இருக்கிறது. அது பறித்ததாகப் போய்ச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழக்கத்திற்கு வந்தது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். கிழக்கிந்திய கம்பெனிப் படைக்கு சின்னமலை ஒரு பெரும் தடையாக விளங்கினார்.

டிசம்பர் 7, 1782-இல் ஹைதர் அலியின் மறைவிற்குப் பின், திப்பு சுல்தான் மைசூர் ஆட்சிக்கு வந்தார். கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துப் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்பு சுல்தானுக்குப் பெரிதும் உதவியது.

குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைக்கு கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது.

மேலும் நெப்போலியனுக்கு திப்புவின் கோரிக்கையோடு பிரான்சுக்குத் தூதுசெல்லும் வேலையை தீரன் சின்னமலையின் வீரர் கருப்பச்சேர்வை செய்கிறார். திப்புவின் முடிவுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகள் கும்பினிப் படை வசமாகின்றன. அடங்க மறுக்கும் சின்னமலைக்கு ஆங்கிலேயப் படை குறி வைக்கிறது.

எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.

வெற்றி

அறச்சலூர்ப் போரில் ஆங்கிலப் படையைத் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. காவிரிக்கரைப் போரில் 1801-இல் கர்னல் மாக்ஸ்வெல் படையைத் துரத்துகிறார். அதே மாக்ஸ்வெல்லின் தலையை 1802-இல் ஓடாநிலைப் போரில் வெட்டி வீசினார் சின்னமலை. வெறியோடு 1803-இல் குதிரைப் படையுடன் சின்னமலையைக் கைது செய்ய வந்த ஜெனரல் ஹாரிஸின் படைகள் மீது எறிகுண்டை வீசித் துரத்தி அடிக்கிறார் சின்னமலை. 
மீண்டும் பெரும் படையுடன் ஜெனரல் ஹாரிஸ் வருவதை அறிந்த சின்னமலை ஓடாநிலைக் கோட்டை வாசலில் பீரங்கியால் தாக்குவது போல வெறும் பீரங்கியை வைத்து விட்டு கோட்டையில் இருந்து தலைமறைவாகி, காங்கேயம் சென்றார். 
அங்கிருந்து வாழை வியாபாரி போன்ற வேடத்தில் பழனி சென்றார். மற்ற பாளையக்காரர்களுடன் கும்பினிப் படையைத் தாக்கத் திட்டமிடுகிறார். எட்டப்பனைப் போல இங்கும் சமையல்காரன் நல்லப்பன் காட்டிக் கொடுக்க தீரன் சின்னமலை கும்பனிப் படையால் கைது செய்யப் படுகிறார்.

தூக்கிலிடப்படல்

போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி செய்தனர். சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்றனர். போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று சங்ககிரி மலைக்கோட்டையின் ஆலமரத்தில் தூக்கிலிட்டனர். அவருடைய தம்பிகள் பெரியதம்பி, கிலேதர் ஆகியோரும், கருப்ப சேர்வையும் உடன் தூக்கிலிடப் பட்டனர்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியைத் தலைமையிடமாக கொண்டு ஒரு போக்குவரத்துக் கழகமும், கரூரைத் தலைமையிடமாக கொண்டு ஒரு தனி மாவட்டமும் இருந்தன. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்தது உள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.

இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது. அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச் சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

கல்லாய்ச் சமைந்த ஒரு துயரம், சங்ககிரி மலை எனும் பெயரில் தீரன் சின்னமலையின் நாட்டுப்பற்றை உயர்த்திக் காட்டி நிற்கிறது.


Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-