http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 17, 2014


'பாராட்டுதல்' - என்பது மனித குணங்களில் உன்னதமானது! பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் - பாராட்டப் படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது! பாராட்டுரையைத் தலைசிறந்த 'கிரியா ஊக்கி' என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர்.

பாராட்டுதல் பல வகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது; முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது; மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே!!



படிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும்.

வெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்!

இந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம்! சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு?


அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது! தன்னம்பிக்கை தானே தழைக்கிறது!!

பாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது.

பாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்!

சின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும்.

பாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக் கூடாது.

நம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும்! 
பி.பி.சீனிவாஸ்
சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்!

பிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.

சமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும்.

'பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்' - என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள்! இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை!

நமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்புற வளரும்படி செய்வோம்!

நன்றி:  பி.தயாளன்

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-