http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 18, 2014

அரசியல் வாழ்க்கை, சமயம் சார்ந்ததாக இருந்தால், மனிதர்களிடையே நிலவும் சமநிலை வளர்ச்சிக்கு அதுவே தீங்காக அமையும். அரசியல் வாழ்க்கையில் இணையும் போது அதனால் கிடைக்கக் கூடிய அதிகாரத்தினால் மயங்கி நெறி பிறழாமல் வாழ்வதற்கு, மனித நிலை கடந்து தன்னைத் தானே ஆளுகின்ற திறம் வேண்டும். அதே மாதிரி, வாழ்ந்து காட்டியவர் தான் ‘தத்துவமேதை’ டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன்!

அன்றைய காலத்து சென்னை மாநிலத்தின் திருத்தணி எனும் சிறு கிராமம் இவருடைய ஊர். அங்கு, 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் சர்வபள்ளி வீராசாமி.




தனது ஆரம்பக் கல்வியைத் திருத்தணி, மாவட்டக் கழகப் பள்ளியில் பயின்றார். பின்பு உயர்நிலைப் பள்ளிக் கல்வியை ஹெர்மன்ஸ் பர்க் லுத்துரன் மிஷன் பள்ளியில் பயின்றார். வேலூர் ‘ஊரிஸ் கல்லூரி’யில் புகுமுக வகுப்பை முடித்தார். கல்லூரி மாணவராக இருக்கும் போதே சிவகாமு என்பவரை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டார்.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளை நிறைவு செய்தார். புகுமுகு வகுப்பு முதல் முதுகலை வரை உதவித் தொகை பெற்று கல்வியை முடித்தார்! முதுகலைத் தேர்வின் போது “வேதாந்தங்கள் கூறும் அறமும் அதன் மெய் விளக்க மேற்கோளும்” என்ற ஆய்வுக் கட்டுரையை வரைந்தார்.




கல்லூரிப் படிப்பை முடித்த பின்பு, கல்வித் துறையில் அரசு ஊழியராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1909 ஆம் ஆண்டு தத்துவ இயல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். கல்வி கற்பித்தலில் பட்டம் பெறுவதற்கு சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பயிற்சி முடிந்ததும் சென்னை மாநிலக் கல்லூரியே மறுபடியும் இவரை ஏற்றுக் கொண்டது.

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், மாணவர்களால் சிறந்த ஆசிரியர் என்று அழைக்கப் பட்டார். மாணவர்களின் நலனிலும், முன்னேற்றத்திலும், தனி அக்கறை காட்டினார். ஆசிரியர்களுக்கு எல்லாம் ஆசிரியராக விளங்கினார்.




‘பன்னாட்டு அறிவியல்’, ‘ஆசியவியல் மறுசீராய்வு’ போன்ற பன்னாட்டு இதழ்களுக்கு ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயல் பேராசிரியராக 1918 ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்பு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிக்குச் சென்றார். மகாகவி இரவீந்தரநாத் தாகூருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்றார். அங்கு தத்துவ இயல் பேரவையைத் தோற்றுவித்தார். அந்தப் பேரவையில் நிகழ்ந்த முதல் சொற்பொழிவு செய்ய இரவீந்திரநாத் தாகூரை அழைத்தார்.
 

லண்டனில் நடைபெற்ற பிரிட்டிஷ் பேரரசுப் பல்கலைக்கழகங்களின் பேரவைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சார்பாக கலந்து கொண்டார். அங்கு, மான்செஸ்டர் கல்லூரியில் சொற்பொழிவாற்றினார். அவரது அறிவார்ந்த சொற்பொழிவுகள் அங்கு கூடியிருந்த அறிஞர் பெருமக்களிடையே ஆர்வத் துடிப்பை ஊட்டியதுடன், மிகுந்த பாராட்டையும் பெற்றது.


சிகாகோ நகரில் ஹாஸ்கெல் சொற்பொழிவுகளை ஆற்றினார். ஹார்வார்டில் நடைபெற்ற பன்னாட்டுத் தத்துவப் பேரவையில் கலந்து கொண்டு, ‘உலக நாகரிகங்களை வளர்ப்பதில் தத்துவத்தின் பங்கு’ – என்ற தலைப்பில் நல்ல ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்.

கல்கத்தா பல்கலைக் கழகத்தின் முதுகலைக் கல்விக் கழகத்தின் தலைவராகவும், பல்கலைக் கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும், பல்கலைக் கழக அமைப்பாண்மைக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புகழ் பெற்ற பெனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றர். அப்போது, நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்கு முறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்து எழுந்தனர்; பிரிட்டிஷ் அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணை வேந்தராய் இருந்த டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்று மிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம் பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதைத் தடுத்து நிறுத்தினார்.




வால்டேரில் உள்ள ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றிய போது, அந்தப் பல்கலைக்கழகத்தினைத் தனித் தகுதி பெற்ற கல்வி நிறுவனமாக உயர்த்தினார். அப்பல்கலைக்கழகத்தில் சிறந்த நூலகத்தையும் உருவாக்கினார்.

கீழ்த்திசைச் சமயங்களுக்கான பேராசிரியராக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரிட்டிஷ் கழகத்தில், 1937 ஆம் ஆண்டு புத்தரைப் பற்றி ‘தலைமை ஞானி’ என்ற பொருளில் சிறந்த உரை நிகழ்ந்தினார்.




இந்தியா விடுதலை பெற்றவுடன் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் தலைமையில் கல்வி நலஞ்சார்ந்த பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப் பட்டது. அக்குழுவை இந்தியாவில் உள்ள இருபத்தைந்து பல்கலைக்கழகங்களுக்கு அழைத்துச் சென்றும், நேரில் ஆய்வு செய்தும், சிற்ப்பான அறிக்கையை அரசுக்கு அளித்தார். அந்த அறிக்கை தற்கால இந்தியக் கல்வி முறைக்கு நல்வழிகாட்டும் தோன்றாத் துணையாக நின்று விளங்குகிறது!

உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களைவதற்கும், கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் அக்குழுவின் பரிந்துரைகள் துணை நிற்பனவாகும். ஆனால், இக்குழுவின் பெரும்பாலான பரிந்துரைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவை செயல்படுத்தப் படாததால், உரிய பலனைத் தராமல் தூசு படிந்து கிடப்பது வேதனைக்குரியதாகும்.



ரஷ்யாவிற்கான இந்தியத் தூதராக டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் 1949 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். “இந்த மனிதர் பிற வழக்கமான தூதுவர்களைப் போல இல்லை. இவர் தனது இதயத்தில் மனித நேயமும், அன்பும் கொண்டவர்” என்று ரஷ்ய நாட்டுத் தலைவர் ஸ்டாலின் இவரைப் புகழ்ந்து உரைத்து உள்ளார்.

இந்தியக் குடியரசின் துணைத் தலைவராக டாக்டர். எஸ் இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு 1954 ஆம் ஆண்டு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இவரின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவரது பெயரில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப் படுகிறது.



பாரதிய வித்யாபவன் தலைவர் கே.எம் முன்ஷி, டாக்டர். எஸ்.இராதாகிருஷ்ணனுக்கு ‘பிரம்ம வித்யா பாஸ்கரர்’ என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.

சாகித்திய அகாதெமி, பென் அனைத்திந்திய மையம் போன்ற உயர் நிறுவனங்களைத் தமது அறிவாண்மையால் நடத்திச் சென்றார், சாகித்திய அகாதெமியின் ஆட்சிக்குழு உறுப்பினராக 1968ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். தத்துவ இயல் ஆய்வில் அவர் ஆற்றிய பணிக்காக டெம்ப்லீடன் பரிசு (Templeton Prize) வழங்கப் பட்டது. தத்துவமேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன், 1975 ஆம் ஆண்டு எப்ரம் 14 ஆம் நாள் காலமானார்.

டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் கல்விச் சிந்தனைகள் :

•அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவது தான் சிறந்தது.



•ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக் கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும்.

•அனைவருக்கும் உயர்க்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும்.

•கல்வியானது மனிதனை நெறிமுறைப் படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும்.


•பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும்,  கருத்துப் புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும்.

•ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் – கலைஞர்கள் – புதியன கண்டுபிடிப்பவர்கள் – மறைந்துள்ளவற்றைத் தேடி அறிபவர்கள் – ஆகியோரை நம்புதல் வேண்டும். அவர்களுக்குப் பல்கலைக் கழகங்களில் பயிற்சிகள் தருதல் வேண்டும்.



•பல்கலைக் கழகங்கள், ஆய்வுக்கும், ஞானத்துக்கும் வழிகாட்ட வேண்டும். ஒழுக்க உணர்வுக்கும், உள்ளத் தூய்மைக்கும் பயிற்சி அளித்திட வேண்டும்.

அவரின் சமூகச் சிந்தனைத் துளிகள் சில

•சாதியம், சுய சிந்தனையின் வளர்ச்சியைத் தடைசெய்கிறது. ஊகத்தின் அடிப்படையிலான கருத்துக்கள் வளர்வதை ஊக்கப் படுத்துகிறது. இதனால் ஒழுக்கம் கெட்டுவிடுகிறது. ஒருவரை ஒருவர் அவமதிக்கும் செயல்கள் பெருகின. எனவே, எந்தச் சாதியும், சமயமும், தத்துவமும் மனிதகுல முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டும்.



•கடமைகளையும் உரிமைகளையும் பிரித்துப் பார்த்துச் செயல்பட வேண்டும்.

•அணு ஆயுதங்களின் கொடுமையால் ஒட்டுமொத்த சமூகமும் அழிந்து பாழாகிறது. எனவே, அணு ஆயுதங்களை எந்த நாடும் போரில் பயன்படுத்தக் கூடாது.

தத்துவமேதையின் தனிப்பெரும் படைப்புகள் : ‍

1. உண்மையைத் தேடி
2. இரவீந்திரநாத் தாகூரின் தத்துவம்
3. இந்தியத் தத்துவம்
4. ஓர் இலட்சியவாதி நோக்கில் வாழ்க்கை
5. கல்வி – அரசியல் – போர்
6. சமயமும் சமுதாயமும்
7. மாறிவரும் உலகில் சமயம்

இவை தவிர்த்து, இருபதுக்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான மேலும் பல நூல்களை இந்திய மக்களுக்கு வழங்கியுள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதும் கல்வி உலகம் வளம் பெற அயராது பாடுபட்டவர்! சோதனைக் காலத்திலும் நிமிர்ந்து நின்று, நடுநிலையுடன் செயல்பட்டவர்! மக்களிடம் நம்பிக்கை விதையை நட்டவர்! எழுதியவாறே நடந்து கொண்டவர்! இலட்சிய ஆசிரியர்! வளமான அறிவுத் திறம் படைத்தவர்! அவரைத் ‘தத்துவமேதை’ என்று உலகம் புகழ்வது மிகவும் பொருத்தமாகும்!

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-