http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 17, 2014



மனித உரிமை என்பது கருவறையில் தொடங்கி கல்லறை வரை தொடர்கிறது. ஒரு மனித உயிர் கருவாய் உருக்கொள்ளும் கணத்திலேயே மனித உரிமை பிறந்து விடுகிறது. முறையற்ற கருக்கலைப்பு என்பதே முழுமையாய் ஒரு பெரும் குற்றம். மனிதனை மனிதனாக மதிப்பதே மனித உரிமை.


"மற்றவர்கள் உன்னை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அதே மதிப்பை நீயும் அவர்களுக்கு அளி' என்பதே மனித உரிமையின் அடிப்படைத் துத்துவம். இந்த மனித உரிமைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது இன்று நேற்று அல்ல. மனிதன் நாகரிகமாக வாழ கற்றுக் கொண்டது முதலே தொடங்கியது.

மனித உரிமை கோட்பாடு

மனித உரிமை என்ற சொல், 1766-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் தான் முதன் முதலாக பயன்பட்டதாக அறியப் பட்டுள்ளது. பண்டையக் காலத்தில் மனித உரிமை என்பது தர்ம சிந்தனையாகவும், பாவ புண்ணிய மதிப்பீடாகவும் இருந்து வந்திருக்கிறது.


1521-ஆம் ஆண்டு சில குறிப்பிட்ட பிரிவினரின் நல உரிமைகள் குறித்து நீதி வழங்குமாறு பிரிட்டிஷ் மன்னர் ஜார்ஜிடம் சமர்பிக்கப்பட்ட மனுக்களே பேருரிமைப் பத்திரம் (Magna Carta)  எனப்படும். இதுவே மனித உரிமையின் தோற்றுவாய் எனக் கருதப்படுகிறது. 1650-ம் ஆண்டு குரோட்டியஸ் (Crotious)  என்ற டச்சு தத்துவஞானி "மனிதனின் இயற்கையான உரிமைகள் உலகந்தழுவியது' என்றார்.

1688-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உரிமை சாசனம் (Bill of Rights) ஆட்சியாளர்களது ஒப்புதலுடன் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிற உயரிய லட்சிய முழக்கங்களோடு பிறந்த பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1789-ஆம் ஆண்டு "மனித மற்றும் குடிமக்கள் உரிமை பிரகடனம்' (The Declaration of Right of man and citizen)  உருவாயிற்று. மனித உரிமை வரலாற்றுக் களத்தில் முதல் தடமென இதனைக் கருதலாம்.


19-ஆம் நூற்றாண்டில், பாட்டாளி வர்க்க்ததை சுரண்டல் தளையிலிருந்து மீட்கும் அறிவியல் பூர்வமான அரசியல் அறிக்கை வாயிலாக மனித உரிமைகளுக்கு செழுமை சேர்த்தார் காரல் மார்க்ஸ்.

 
"எட்டு மணி நேர உழைப்பு, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர ஓய்வு' என்றக் கோரிக்கையை முன்வைத்து சிகாகோவில் 1886-ஆம் ஆண்டு உழைப்பாளர்கள் உரிமைப் போராட்டம் நடத்தினர். மே தினப் போற்றும் "மே தினம்' - என்று இன்றும் அப்போராட்டம் பெருமிதத்துடன் நினைவு கூறப் படுகிறது.

1914-ஆம் ஆண்டு துவங்கிய முதல் உலகப் போர் முடிவில், ரஷ்யப் புரட்சி வெடித்து "நிலம், ரொட்டி, சமாதானம்'' என்கிற அடிப்படை உரிமைகளை முன் அறிவித்தது. ஜெர்மனியில் ஹிட்லரும், இத்தாலியில் முசோலினியும்,  பாசிச, நாசிச சக்திகள் அழிவு செயலில் ஈடுபட்டன. 1942 ஆகஸ்ட் 6, 8 ஆம் தேதிகளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியது.

நாஜி முகாம்களில் யூதர்கள் சிறை வைக்கப்பட்டு கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாயினர். கட்டாயக் கருத்தரிப்பு, கட்டாயக் கருக்கலைப்பு, விஷப்புகை கிடங்கில் உயிர்வதை செய்தல் போன்ற மனித குலம் வெட்கி தலைகுனியும் மிருகத் தனமான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன.

இப்பின்னணியில் தான் மனித உரிமை பிரகடனம் வடிவம் பெற்றது. 1948 டிசம்பர் 10-ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபை கூடி "சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை (The Declaration of Right of man and citizen) வெளியிட்டது.


இந்தியாவில் மனித உரிமைக் கோட்பாட்டின் வளர்நிலை

புராணங்களிலும், இதிகாசங்களிலும் மனித உரிமை மறுக்கப்பட்டதற்கான சான்றுகளும், அதற்கான எதிர்ப்புக் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலைகளையும் அறிய முடிகிறது. நந்தன், நல்லதங்காள், நளாயினி, கர்ணன், ஏகலைவன் போன்றவர்களின் வரலாறுகளை மேற்சொன்ன உண்மைக்கு சான்றாகக் கருதலாம்.


சமஸ்கிருத மனுநீதி ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகளில் பேதத்தைக் காட்டியது. பெண்ணை இரண்டாம் தரத்திலிருந்து ஆண்களின் ஆளுமைக்குக் கீழ் கொணர்ந்தது. ஆனால் திருக்குறள் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்று முழங்கி, சட்டத்தின் முன் சகலமும் சமம் என்று வலியுறுத்தியது.

பதினோராம் நூற்றாண்டில் இராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து, கோவில்களை அவர்களுக்காக திறந்து விட்டார். பிற்படுததப் பட்டோர், தாழ்த்தப் பட்டவர்கள் ஓதக்கூடாது என மறுக்கப் பட்ட "ரகசியார்த்தம்' மந்திரத்தை கோபுரத்தின் மீது நின்று எல்லோருக்கும் ஓதினார்.


1848-ஆம் ஆண்டு ஜோதிபா பூலே தன் மனைவி சாவித்திரி பாய்க்கு கல்வி புகட்டி, அவர் மூலம் தம் வீட்டில் பெண்களுக்கான முதல் பள்ளியைத் துவக்கினார். தீண்டத் தகாதவர்களுக்கு துவங்கப் பட்ட இந்தியாவின் முதல், மற்றும் பெண்களுக்காக துவங்கப் பட்ட முதல் பள்ளி என்ற பெருமையும் இதற்குண்டு.

கபீர்தாஸர், சைதன்யர், துகாராம் போன்ற சமயப் பெரியோர்கள் பக்தி மார்க்கத்தின் வாயிலாக மனித உரிமைகளுக்குக் குரல் கொடுத்தனர். திருமூலர் முதலான சித்தர்கள் மனித உரிமைக்கான அடித்தள கருத் தேற்றங்களை உருவாக்கினார்.



1936-ஆம் ஆண்டு டிசம்பர் 12-இல் திருவிதாங்கூர் மன்னர் சுசீந்திரம் கோவிலுக்குள் தாழ்த்தப் பட்ட மக்கள் நுழைய முதன் முதலாக அனுமதித்தார்.

இந்துமதம் சார்ந்து உருவான ஒடுக்கு முறைகளை எதிர்த்து பல இயக்கங்களை தந்தை ஈ.வெ.ரா. பெரியார் நடத்தினார். அர்த்த சாஸ்திர அடிப்படைக் கட்டமைப்பை  அரவணைத்துக் காப்பதே ஆதிக்க நலனுக்கு உகந்தது என்ற பிரமண அரசியல் தந்திரத்தை தனது தீவிர போராட்டங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.

 1936 ஜூலையில் ""அகில இந்திய மனித உரிமைக் கழகம்' ஜவஹர்லால் நேருவின் முயற்சியால் உருவாக்கப் பட்டது. ரவீந்திரநாத் தாகூர் இவ்வமைப்பின் தலைவராக இருந்து செயல் பட்டார். இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வகையில் மனித உரிமைக்கான போராட்டமே.

1950 ஜனவரி 26-ஆம் நாள் பிரகடனப் படுத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தில், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் சாரம் உள்ளடக்கப்பட்டு வழிகாட்டும் நெறிமுறைகள் வடித்தெடுக்கப் பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமை பிரகடனம்

"ஐக்கிய நாடுகளில் சபையின் உறுப்பு நாடுகளாகிய நாங்கள் அடிப்படை மனித உரிமைகளிலும், மனிதனுடைய மாண்பு மற்றும் மதிப்பு, பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள சம உரிமைகளிலும், பெரிய மற்றும் சிறிய தேசங்களிலும் அதன் நம்பிக்கையைப் புதுப்பிப்போம்'' - என்று இந்த சாசனம் பிரகடனம் செய்கிறது.

"சமூக, பொருளாதார, பண்பாடு அல்லாமல் மானுட மேம்பாடு குறித்த சர்வதேச பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், இன, பால், மொழி, மதபேதமின்றி அனைவருக்குமான அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் மதிப்பை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை அடைவோம்' என்பதே ஐக்கிய நாடுகளின் சபையின் குறிக்கோள் என்று இச்சாசனம் அறிவிக்கிறது.

முக்கிய மனித உரிமைகள்

1. உயிர் வாழும் உரிமை, 2. உணவு பெறும் உரிமை, 3. சமத்துவ உரிமை, 4. சுதந்திரமாக வாழும் உரிமை, 5. சித்ரவதைக்கு உட்படுத்தப்படாமல் வாழும் உரிமை, 6. சட்டத்தின் முன் யாவரும் சமமென்ற உரிமை, 7. இயக்கமாக சேர உரிமை, 8. வாக்களிக்கும் உரிமை,  9. பாதுகாப்புடன் வாழும் உரிமை, 10. ஆண், பெண் சம ஊதிய உரிமை, 11. குடியுரிமை, 12. கருத்தை வெளிப்படுத்தும் உரிமை.

மனித உரிமைகளை பாதுகாத்தல்

மனித உரிமைகளுக்கான முதல் குரல் 1948-ஆம் ஆண்டில் தான் ஒலித்தது. இரண்டாவது உலகப் போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் வடிவில் இந்தக் குரல் ஒலித்தது. மனித குலம் சில குறிப்பிட்ட உரிமைகளை பெற்றுள்ளது என்பதையும், அனைத்து மக்களின் மனித கண்ணியம் மதிக்கப்படுவதன் மூலமும், மனித குலத்தின் கொடியக் குற்றங்களுக்கு மதிப்பளிக்காமல் இருப்பதன் மூலமும்தான் உலகில் நீதியையும், அமைதியையும் ஏற்படுத்த முடியும் என்பதையும் இந்தப் பிரகடனம் அங்கீகரிக்கிறது.

 பேச்சுரிமை, மனித குல நம்பிக்கை, அச்சமின்றி வாழும் உரிமை ஆகியவை தான் மக்களின் அதிகபட்ச எதிர் பார்ப்புகள் என்பதையும் இந்தப் பிரகடனம் அங்கீகரிக்கிறது. இந்தப் பிரகடனத்தில் மொத்தம் 30 பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பிரகடனத்திற்குப் பிறகு நிறைவேற்றப் பட்ட பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்கள், பிராந்திய மனித உரிமை சட்டங்கள், தேசிய அரசியல் சட்டங்கள் மற்றும் சட்டங்களின் இந்த 30 பிரிவுகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.

மனித உரிமைக்கான பிரகடனம்

 மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை உள்ளடக்கிய மனித உரிமைகளுக்கான சர்வதேச சட்டம், சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாடு, குடியுரிமை மற்றும் அரசியல் உரிமை களுக்கான சர்வதேச உடன்பாடு, அதன் அடிப்படையிலான இரண்டு ஒப்பந்தங்கள் ஆகியவை 1976-ஆம் ஆண்டில் சர்வதேச சட்டமாக உருவெடுத்தன. அதைத் தொடர்ந்து 1993-ஆம் ஆண்டு வியன்னா பிரகடனமும், செயல்திட்டமும் நிறைவேற்றப்பட்டன.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, மனித உரிமைகள் ஆகியவை ஒன்றையொன்று சார்ந்தவை என்பதை வியன்னா பிரகடனம் உறுதி செய்தது. அது மட்டுமின்றி, மனித உரிமைகள் ஒன்றையொன்று சார்ந்தவை, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை, பிரிக்க முடியாதவை என்ற கொள்கையை ஏற்படுத்தியது.

இந்தப் பிரகடனத்தின் மூலம்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையம் என்ற புதிய பதவி ஏற்படுத்தப்பட்டது. வியன்னா பிரகடனத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது.


இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை மனித உரிமைகள்

"இந்தியாவை ஒரு பேரரசாண்மை வாய்ந்த, சமநல நெறிசார்ந்த, சமய சார்பற்ற, மக்களாட்சி குடியரசாக வடிவமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார, அரசியல் நீதியும், சிந்தனை வெளிப்பாட்டில் நம்பிக்கையில், பற்றார்வத்தில் மற்றும் வழிபாட்டில் தன்னுரிமையும், தகுதிநிலையில் மற்றும் வாய்ப்பில் சமன்மையும் உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனியொருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் உடற்பிறப்புணர்வை வளர்க்கவும் உறுதி பூண்டுள்ளது'' - என்று இந்திய  அரசியல் சட்ட முகப்புரை (Preamble)  முழங்குகிறது.

1. சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு- 14), 2. மதம், இனம், குலம், பாலினம் (நங்ஷ்) அல்லது பிறப்பிடத்தைக் காரணம் காட்டி எந்த ஒரு குடிமகனிடமும்/குடிமகளிடமும் அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளலாகாது. (பிரிவு- 15), 3. குடிமக்கள் யாவருக்கும் பேச்சுரிமையும், சிந்தனையை வெளிப்படுத்தும் உரிமையும் உண்டு.

அமைதியாக, ஆயுதங்களின்றி ஒன்று கூடும் உரிமை உண்டு.

கழகங்கள், சங்கங்கள் அமைத்துக் கொள்ளும் உரிமை உண்டு.

இந்திய எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதியிலும் தங்கி இருக்கவோ, வீடமைத்து நிரந்தரமாக வசிக்கவோ உரிமை உண்டு.

சொத்துக்களை வாங்க, அனுபவிக்க, விற்க உரிமை உண்டு.

எந்த ஒரு வேலை, தொழில், வர்த்தகத்தை மேற்கொள்கிற உரிமை உண்டு. (பிரிவு-19), 4. ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் ஒருவர் மீது வழக்குத் தொடரவோ, தண்டனை அளிக்கவோ கூடாது.

சட்டப்படியான நடைமுறை ஒருவருடைய உயிரை அல்லது சுய உரிமையை (டங்ழ்ள்ர்ய்ஹப் கண்க்ஷங்ழ்ற்ஹ்) இழப்புற செய்யக் கூடாது. (பிரிவு-21). 5. காரணங்கூறாமல் ஒருவரை கைது செய்யக்கூடாது. அவருக்கு அவரது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசிக்கவும், எதிர் வழக்கிடவும் வாய்ப்பு தரவேண்டும். (பிரிவு-22). 6. தடுப்புக் காவலில் ஒருவரை மூன்று மாதத்திற்கு மேல் காவலில் வைக்கக்கூடாது. (பிரிவு-22 (4)). 7. குடிமக்களுடைய ஊட்டச்சத்தின் தரநிலை, வாழ்க்கைத் தர உயர்வு, பொது நலவாழ்வு மேம்பாடு, நலவாழ்வுக்குத் தீங்கிழைக்கும் குடி, போதைப் பொருட்களை தடை செய்தல் ஆகியவற்றையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். (பிரிவு 47)

தேசிய மனித உரிமை ஆணையம்

மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தின் (1993) படி, நம் நாட்டில் தேசிய மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission)  அமைக்கப்பட்டது.

மனித உரிமைகள் என்பது தனி மனிதரின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம். மனித மாண்பு ஆகியனவாகும். இவை அரசியல் அமைப்பு சட்டத்தால் உறுதி அளிக்கப்பட்டு, இந்திய நீதிமன்றங்களால் அமுல்படுத்தப்படுபவை. ஒரு தலைவரையும் நான்கு உறுப்பினர்களையும் கொண்டதாக இந்த அமைப்பு இயங்கும். இந்திய உச்சநீதிமன்றத் தலைமை பொறுப்பில் இருந்த நீதிபதி இதன் தலைவராக நியமிக்கப் படுகிறார்.

உச்ச நீதிபதியாக இருக்கும் ஒருவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும், ஒருவர், மற்றும் மனித உரிமை தொடர்பான அறிவு மற்றும் அனுபவம் பெற்ற இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் செயல்படுகிறது.


ஆணையத்தின் செயல்பாடுகள்

அரசு அல்லது அரசின் கீழுள்ள அமைப்புகள் மனித உரிமைகளை பறிக்க முயலும்போது, மீறுகிற போதும் ஆணையம் அந்த விவகாரத்தில் தலையிடும். அது தானாகவோ, பாதிக்கப்பட்டவரின் புகார் அடிப்படையிலோ விசாரணை மேற்கொள்ளும். நீதிமன்றங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல் வழக்குகளில் தலையிடும் உரிமை ஆணையத்திற்கு உண்டு.

கைதிகளின் நலன்களை ஒட்டி சிறைச்சாலைகளை பார்வை இடவும், பரிந்துரை செய்யவும் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. விசாரணையைப் பொறுத்தமட்டில் ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்குள்ள எல்லா அதிகாரங்களும் ஆணையத்திற்கு உண்டு.


மனித உரிமைகள் தொடர்பான அரசியல் சட்டங்கள் சரிவர நிறைவேற்றப்படுகிறதா என்று அவற்றின் நடைமுறைகளை ஆராய்ந்து, தக்க பரிகாரங்களை, தன் பரிந்துரைகளால் பெற்றுத்தர ஆணையம் பெரிதும் துணை நிற்கிறது.

மாநில மனித உரிமை ஆணையம்

மாநிலங்கள் தமக்கென்று மனித உரிமை ஆணையங்கள் ஏற்படுத்திக் கொள்ள மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது. மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் தலைமையில் இவ்வாணையம் செயல்படுகிறது.

மாநிலத்தின் மாவட்ட நீதிபதியாக இருந்த ஒருவர் மற்றும் மனித உரிமைகள் பற்றிய அறிவு, அனுபவம் உடைய இருவர் இவ்வாணையத்தின் மற்ற உறுப்பினர் களாவர். தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போலவே, மாநில ஆணையங்களும், மாநில மனித பிரச்சனைகளில் உடனடியாக கவனம் செலுத்தி, விசாரணைகள் செய்து, அவசியமான அறிக்கைகளையும், பரிந்துரைகள் மற்றும் நிவாரண ஆலோசனைகளையும் அரசுக்கு தெரிவிக்கிறது.


1948 டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபை கூடி சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து பல உலக நாடுகள் இதனைப் பின்பற்றி அவர்கள் நாட்டின் சூழ்நிலைக்கேற்றவாறு மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை வடிவமைத்தது.

இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்திய மனித உரிமை பாதுகாப்புச் சட்டம் 1993-ன் படி மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டு மனித உரிமைகள் மீறல் தொடர்பான பல்வேறு புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டும் நிவாரணமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று தந்துள்ளதை நாம் கண்கூடாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.


இந்தியாவில் மனித உரிமை மீறல்கள்

இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் இடங்களை அரசு இனம் கண்டு அதை சட்டத்தின் மூலம் தடுத்து வருகிறது. அதேபோல் அதை மீறுபவர்களுக்கும் தண்டனை வழங்க அந்தந்த சட்டங்களிலேயே வகை செய்யப்பட்டுள்ளது.
 

உதாரணமாக 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்துதல், 1933-ஆம் ஆண்டு குழந்தைகள் (உழைப்பை அடகு வைத்தல்) சட்டம் 1986-ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தும் சட்டம் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம், கட்டாய தொடக்கக் கல்வி சட்டம், முதியோர் பாதுகாப்புச் சட்டம், மகளிர் வன்கொடுமை தடைச் சட்டம், குடும்ப வன்முறை தடைச் சட்டம் போன்ற பல்வேறு சிறப்புச் சட்டங்களை மத்திய அரசும் மாநில அரசும் அவ்வப்போது இயற்றி வருகிறது.

இவை எல்லாவற்றோடும் மனித உரிமைச் சட்டம் தொடர்புடையது இவை அவ்வப்போது மீறும் போது தண்டனையும் நிவாரணமும் அளிக்கப்பட்டு இருந்தாலும் இன்று மக்கள் மனித உரிமைகள் புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் புகார் செய்வதுடன் காவல் துறையிடம் புகார் செய்யும்போது புகார்களின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஒரு சில அதிகாரிகள் சட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு செயல்படும் போது சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. இத்தகைய மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங், டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் காவல்துறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உச்சநீதிமன்றத்தின் மூலம் பதினோரு கட்டளைகளை வெளியிட்டு உள்ளார்கள்.


இந்திய உச்சநீதிமன்றத்தின் கட்டளைகள்

1. கைது செய்கின்ற அல்லது விசாரணை நடத்துகின்ற அதிகாரி, தனது பெயர், பதவி ஆகியனத் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். விசாரணை மேற்கொள்ளும் அனைத்து அதிகாரிகளைப் பற்றிய விவரங்களும் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

2. கைது செய்கிற அதிகாரி, கைது செய்வதுடன் ""கைது குறிப்பு'' ஒன்றினைத் தயாரிக்க வேண்டும். அதில் குறைந்தது ஒரு சாட்சியாவது கையெழுத்திட வேண்டும். அச்சாட்சி, கைது செய்யப் பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் அல்லது அப் பகுதியில் வசிக்கின்ற மதிப்பிற்குரிய நபராக இருக்க வேண்டும். அக்குறிப்பில் கைது செய்யப்பட்டவரும் கையெழுத்திட வேண்டும். கைது செய்த நேரமும், தேதியும் குறிக்கப்பட வேண்டும்.

3. கைது குறிப்பில் கையெழுத்திடும் சாட்சியே நண்பர் அல்லது உறவினராக இல்லாத போது, கைது செய்யப்பட்டு அல்லது போலீஸ் காவல், விசாரணை மையம் அல்லது வேறு வகையான  அடைப்புக்குள் வைக்கப்பட்டிருக்கும் நபர், தான் கைது செய்யப்பட்டு, குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் விபரத்தைக் கூடிய விரைவில் தனது உறவினர், நண்பர், அறிந்தவர் அல்லது தனது நலனில் அக்கறை கொள்ளக்கூடிய ஒருவருக்குத் தெரிவிக்க உரிமைய உடையவராவர்.

4. கைது செய்யப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் வேறு மாவட்டத்தில் இருந்தால் அங்குள்ள சட்ட உதவிக் கழகத்தின் மூலமாகவும், அங்குள்ள காவல் நிலையத்திற்கு தந்தி கொடுப்பதன் மூலமும், கைது செய்ததிலிருந்து 8 மணி முதல் 12 மணி நேர அவகசாத்திற்குள், கைது செய்யப்பட்ட நேரம், இடம், காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த விபரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

5. ஒருவரை கைது செய்யும்பொழுது அல்லது காவலில் வைக்கும்பொழுது அது குறித்த தகவலைத்தான் விரும்பும் ஒருவருக்குத் தெரிவிக்க உரிமை உண்டு என்ற விபரத்தைக் கைது செய்யப் பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும். 

6. காவலில் வைக்கப்பட்டுள்ள இடத்தில், அதற்கென உள்ள பதிவேட்டில், கைதான விபரத்தையும், கைது குறித்து யாருக்குத் தெரிவிக்கப்பட்டது என்பதையும், கைது செய்யப் பட்டவர் எந்த அதிகாரிகளுடைய பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களையும் குறிக்க வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவர் வேண்டிக் கொண்டால், அவரைப் பரிசோதித்து கைது செய்யப்பட்ட சமயத்தில் அவர் உடம்பில் சிறிய காயங்களோ, பெரிய காயங்களே இருந்தால் அவற்றைப் பற்றி அப்பொழுதே பதிவு செய்ய வேண்டும். 

8. கைது செய்யப்பட்டவர் காவலில் உள்ளபோது 48 மணி நேரத்திற்கு ஒருமுறை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

9. கைது குறிப்பு உட்பட மேலே குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை, கோப்பிற்கென, நிர்வாக நடுவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

10. கைது செய்யப் பட்டவரைக் கேள்வி கேட்டு விசாரிக்கின்றபோது, விசாரணையின் போது வழக்கறிஞரை சந்திக்கின்ற வாய்ப்புத் தரப்பட வேண்டும்.

11. ஒருவரைக் கைது செய்து காவலில் வைக்கின்ற போது அவரைக் கைது செய்த அதிகாரி கைது செய்த விபரம் மற்றும் காவலில் வைத்துள்ள இடம் குறித்து, கைது செய்ததில் இருந்து 12 மணி நேரத்திற்குள் மேற்கூறிய காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்விவரங்கள் எல்லோருக்கும் தெரியும் வகையில் காவல் கட்டுப்பாட்டு அறையின் விளம்பரப் பலகையின் பார்வைக்கு  வைக்கப்பட வேண்டும்.


இப்படி அரசு மனித உரிமையைக் காக்க பல்வேறு சட்டங்கள் மூலமாக பாதிக்கப்பட்டோர் அல்லது பாதிக்கப் பட்டவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி வந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போல பிறரை மதித்து வந்தாலே மனித உரிமை மீறல் இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.   

இந்தியாவில் மனித உரிமைகளை பாதுகாத்தல்

இந்தியாவில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான முதன்மையான கொள்கை திட்டத்தை 1993-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்தான் நிறைவேற்றித் தந்துள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் 51-வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படியும், வியன்னா மாநாட்டில் இந்தியா அளித்த உறுதிமொழிகளின்படி தான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

மனித உரிமை என்பது இந்திய அரசியல் சட்டம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களில் (குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைக்கான சர்வதேச ஒப்பந்தம், 1966-ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஐ.நா. பொது அவையில் நிறைவேற்றப்பட்ட சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்) மனிதர்களின் அடிப்படை உரிமையாக குறிப்பிடப் பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன் தொடர்புடையது என்பதையும், இவை இந்திய நீதிமன்றங்களால் நடைமுறைப் படுத்தக் கூடியவை என்பதையும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் வரையறுத்திருக்கிறது.


மனித உரிமைகளை சிறப்பாக பாதுகாப்பதற்காகவும், மனித உரிமை சம்பந்தப்பட்ட விஷயங்களை கையாளுவதற் காகவும் தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையங்கள் மற்றும் மனித உரிமை நீதிமன்றங் களை ஏற்படுத்துவதற்கு இந்தச் சட்டம் வகை செய்கிறது.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பணிகள்

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டப்படி மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறலுக்கு துணைபோதல், மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்க அதிகாரிகள் தவறுதல் போன்றவை குறித்து தேசிய  மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தலாம்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் தலையிடலாம், மனித உரிமை மீறலில் சம்பந்தப்பட்டவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ள சிறைகள், மருத்துவம் பெற்றுவரும் மருத்துவமனைகள், பாதுகாப்புக்காகவோ அல்லது திருந்துவதற்காகவோ வைக்கப்பட்டுள்ள இடங்கள் உள்பட அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த இடத்திற்கும் சென்று ஆய்வு செய்யலாம். அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரைகளை வழங்கலாம்.


அரசியல் சட்டத்தின்படியோ அல்லது வேறு சட்டப்படியோ மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்குடன் வழங்கப் பட்டுள்ள பாதுகாப்பு உரிமைகளை ஆய்வு செய்து அவற்றை சிறப்பாக செயல் படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கலாம். மனித உரிமைகளை அனுபவிப்பதை தடுக்கும் பயங்கரவாதம் உள்ளிட்ட செயல்களை ஆய்வு செய்து தேவையான மாற்று நடவடிக்கைகளை பரிந்துரைக்கலாம்.

மனித உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்து அவற்றை சிறப்பாக செயல்படுத்த பரிந்துரைகளை வழங்கலாம். மனித உரிமை துறையில் ஆய்வுகளை மேற்கொள்ளலாம் - ஆய்வுகளை ஊக்குவிக்கலாம்.

சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே மனித உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் புத்தகங்கள், ஊடகங்கள், கருத்தரங்குகள் மற்றும் பிறவழிகளின் மூலம் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக உள்ள வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடலாம்.

மனித உரிமையை பாதுகாக்கும் துறையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணிகளை ஊக்குவிக்கலாம். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அவசியம் என்று கருதப்படும் பிற பணிகளை மேற்கொள்ளலாம்.


மனித உரிமை நீதிமன்றங்கள்

மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது விரைவாக விசாரணை நடத்துவதற்கு வசதியாக மனித உரிமை நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன. மனித உரிமை பாதுகாப்புச் சட்டத்தின்படி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அமர்வு நீதிமன்றத்தை மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கான மனித உரிமை நீதிமன்றமாக மாநில அரசுகள் அறிவிக்கலாம்.

ஒவ்வொரு மனித உரிமை நீதிமன்றத்திற்கும் ஒரு அரசு வழக்குரைஞரை மாநில அரசு அறிவிக்க வேண்டும் அல்லது 7 ஆண்டுகளுக்கும் கூடுதலான அனுபவம் உள்ள வழக்குரைஞர் ஒருவரை, மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தும் நோக்குடன் சிறப்பு அரசு வழக்குரைஞராக அமர்த்த வேண்டும்.


தேசிய மனித உரிமை ஆணையத்தின் செயல்பாடுகள்

தேசிய மனித உரிமை ஆணையம் அதன் சொந்த முயற்சியிலோ அல்லது புகார்களின் அடிப்படையிலோ மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். 1908-ஆம் ஆண்டின் குடியுரிமை நடைமுறை சட்டப்படி நீதிமன்றத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் மனித உரிமை நீதிமன்றத்துக்கு உண்டு.

குறிப்பாக சாட்சிகளை விசாரணைக்கு அழைத்தல் மற்றும் அவர்களிடம் உறுதிமொழி பெற்று விசாரணை நடத்துதல்; மனித உரிமை மீறல் தொடர்பான எந்த ஆவணத்தையும் கண்டுபிடித்து தாக்கல் செய்தல்; சாட்சியங்களை பெறுதல்; எந்தவொரு நீதிமன்றம் அல்லது அலுவலகங்களிலிருந்து பொது ஆவணங்களையோ அல்லது அதன் நகல்களையோ கேட்டுப்பெறுதல்; சாட்சிகள் அல்லது ஆவணங்களை ஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை அளித்தல்; மற்றும் இவை தொடர்பான பிற பணிகளை மேற்கொள்ளும் அதிகாரம் மனித உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு.


மனித உரிமை ஆணையத்திற்கு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு காவல் துறை தலைமை இயக்குனர் தலைமையிலான விசாரணை அதிகாரிகள் ஒவ்வொரு மனித உரிமை ஆணையத்திற்கும் உண்டு. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு, மாநில அரசுகளின் எந்தவொரு விசாரணை அமைப்பின் சேவையையும் அல்லது அதிகாரியின் சேவை யையும் மனித உரிமை ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம். மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகளில் தொண்டு நிறுவனங்களுடனும் மனித உரிமை ஆணையம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆணையத்தின் நடவடிக்கைகள்

மனித உரிமை மீறல்கள் உறுதி செய்யப்படும்போது குற்றவாளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கோ, அவரது குடும்பத்திற்கோ நிவாரணம் வழங்கும்படியோ தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைக்கலாம். இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தின் உத்தரவோ தேவை என்று கருதினால், அந்த நீதிமன்றங்களை மனித உரிமை ஆணையம் அணுகலாம்.

மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி பொதுவான வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள்ளும், ராணுவம் சார்ந்த நடவடிக்கைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 மாதத்திற்குள்ளும் மனித உரிமை ஆணையத்திற்கு அரசு தகவல் தெரிவிக்க வேண்டும்.


ஆணையத்திடம் புகார் செய்தல்

ஹிந்தி, ஆங்கிலம் அல்லது 8-வது அட்டவணையில் இடம் பெற்றிருக்கும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் எழுதப்பட்ட புகார்களை மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பலாம். அவற்றின் மீது கூடுதல் ஆவணங்களோ அல்லது உறுதிமொழி பத்திரங்களோ தேவைப் பட்டால் மனித உரிமை ஆணையம் கோரும். தந்திகள் மூலமாகவோ, தொலைநகல், மின்னஞ்சல் அல்லது செல்பேசி மூலமாகவோ புகார்களை பெறும் உரிமை மனித உரிமை ஆணையத்திற்கு உண்டு.

எனினும், ஓர் ஆண்டிற்கும் முந்தைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களையோ அல்லது நீதி மன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் தொடர்பான புகார்களையோ, தெளிவற்ற, அனுப்புவரின் முகவரியற்ற, பொய்யான பெயரில் அனுப்பப்படும் புகார் களையோ, பொய்ப் புகார்களையோ அல்லது பணிகள் தொடர்பான புகார்களையோ மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொள்ளாது.


தமிழ்நாட்டில் மனித உரிமை ஆணையம்

இந்தியாவை பொறுத்தவரை, மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு 28.09.1993 முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் விதி 21-ன் படி, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு 17.04.97 முதல் சென்னையில் இயங்கி வருகிறது.

இவ்வாணையம் 143, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, (கிரீச்வேஸ் சாலை), சென்னை-28-இல் திருவரங்கம் கட்டிட வளாகத்துக்குள் இயங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் இந்த ஆணையம் மற்ற மாநிலங்களைவிட வெகு விரைவாக அமைக்கப்பட்டது என்பது சிறப்பு, இதுபோன்ற மாநில அளவிலான அமைப்பு பதினைந்து மாநிலங்களில் மட்டும் உள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.


உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை தலைவராகவும் மற்றும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டு இவ்வாணையம் சிறப்பாக இயங்கி வருகின்றது. மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ன் விதிகளின்படி ஆணையத்தின் செலவினங்களுக்கான நிதி சட்டப் பேரவையின் ஒப்புதலுடன் மானியமாக அளிக்கப்படுகிறது.

அரசுப்பணியின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், அவர் மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறுதல் அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் ஆணையத்தால் விசாரணை செய்யப்படுகிறது.


மனித உரிமைகள் மீறல் குறித்த புகார் மனுக்களைப் பாதிக்கப்பட்ட நபரோ, அல்லது அவருக்காக அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலமாகப் புகார் மனு அளிக்கலாம். அல்லது தொலைபேசி 044-24951484 கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாணையம், தன்னிடம் பெறப் படும் புகார்களைத் தவிரவும் மனித உரிமைகள் மீறப்படும் நிகழ்வுகள் குறித்து தன்னிச்சையாகவும் விசாரிக்கும் அதிகாரம் கொண்டது.

அரசு அலுவலர்கள் தனது கடமையைச் செய்கிறபொழுது, பொதுமக்களின் உரிமைகள் மீறப்பட்டாலோ, மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்தாலோ, அத்தகைய உரிமை மீறல்களைத் தடுக்க தவறினாலோ, அதன் மீது வரப்பெரும் புகார் மனுக்களின் மீது விசாரணை நடத்தி, புகார்கள் நிரூபனமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது அவரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்குவது, சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் மீது நடவடிக்கை எடுத்திடுவது குறித்து அரசு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வது ஆணையத்தின் இன்றியமையா பணியாகும்.


ஆணையத்தின் சட்டம் மற்றும் நடைமுறை விதிகளின்படி

    1. பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள்

    2. மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்கு பின் பெறப்படும் புகார்கள்.

    3. தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள்

    4. பெயர், கையொப்பம் மற்றும் முகவரி இல்லாமல் அனுப்பபடும் புகார்கள்.

    5. உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள் பற்றிய புகார்கள்.

    6. ஒப்பந்தங்கள் தொடர்புடைய புகார்கள்.

    7. பணியாளர்கள், தொழிலாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள்.

    8. மனித உரிமை மீறல்கள் எனக் குறிப்பிட முடியாத புகார்கள்.

  9. நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள மற்றும் தொடர்புடைய புகார்கள்.

    10. ஆணையம் மற்றும் நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட புகார்கள்.

    11. பிற அதிகாரிகளுக்கு அனுப்பிய புகார்களின் நகல்கள்.

  12. ஆணையத்தின் வரம்புக்குள் வராத ஏனைய புகார்கள் ஆகியவை ஆணையத்தால் விசாரிக்க இயலாத புகார்களாகும்.

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் புகார்களின் மீது அரசு அல்லது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் இருந்து தேவையான புகார்களின் மீது ஆணையத்தின் புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்தும் ஆணையம் அறிக்கை பெறுகிறது.

புகார்கள் தொடர்பான தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் மேல் நடவடிக்கை தேவை இல்லை எனவும் கருதினால் ஆணையம் புகாரினை முடித்து உத்தரவு பிறப்பித்து அந்த உத்தரவு புகார் அனுப்பிய நபருக்கு அனுப்பி வைக்கிறது. புகார்களின் மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் அறிக்கை பெறப்பட்ட பின்னும் மற்றும் விசாரணை தேவை என ஆணையம் முடிவு எடுக்கிறபொழுதும் புகாரின் மீது விசாரணையினை மேற்கொண்டு பரிந்துரைகள்/உத்தரவு பிறப்பிக்கின்றது.


விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் களுக்கு நிவாரணம் வழங்கிட, சம்பந்தப்பட்டவர்களின் மீது, வழக்கு தொடர, நடவடிக்கைகள் எடுத்திட, ஆணையம் பரிந்துரை செய்கிறது.

புகார்களின் பேரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், குற்றமிழைத்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைகளை தமிழக அரசிற்கு அனுப்பும்.

மனித உரிமை விழிப்புணர்வு

ஆணையம் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை வானொலி, தொலைக்காட்சி, செய்தித் தாள்கள் வாயிலாக ஏற்படுத்தி வருகிறது. மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பேணுதல் பற்றிய பயிலரங்கங்கள், இவ்வாணையத்தால் சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் சேலத்தில் நடத்தப்பட்டது.

மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி மனித உரிமை பற்றிய விழிப்பு உணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் தபால் துறையின் மூலம் உள்நாட்டு அஞ்சல் உறை மற்றும் அஞ்சல் அட்டைகள் வழியாக தமிழ் நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தியினை வெளியிட்டு, விளம்பரங்கள் செய்யப்பட்டது.

உலக மனித உரிமை நாள்

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடு களின் பொது சபை மனித உரிமைகளுக்கான உலக பிரகடனம் செய்தது. இந்த நாள் அனைவராலும் உலக மனித உரிமைகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

வாழ்த்து அட்டை  டிசம்பர் 10-ம் நாளுக்கான மனித உரிமை நாள் வாழ்த்து அட்டையினையும் அதன் தொடர்புடைய செய்தியினையும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் முதன் முதலாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் பிற மாநில மனித உரிமைகள் ஆணையங்களும் பயன்படுத்துகின்ற வகையில் ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

1948 ஏப்ரல் 17-ஆம் நாள் முதல் மார்ச் 2010-ஆம் ஆண்டு வரை ஆணையம் 1, 03, 199 மனுக்களைப் பெற்று 97, 615 மனுக்களின் மீது மனுக்களின் தன்மைக்கேற்ப முதல் நிலையிலும், விரிவான விசாரணை மேற்கொண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் உரிய தகவல்களை அனுப்பி இருக்கிறது. பெருகிவரும் புகார்களின் எண்ணிக்கை மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக மக்களின் விழிப்புணர்வு பெருகி வருவதையும், ஆணையத்தின் முனைப்பான செயல்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது.

நன்றி:

{ 1 comments... read them below or add one }

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-