http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 02, 2014

ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பிய போது, அவன் வாழ்ந்த இடத்தின் கற்பாறைகளில் கோடுகளால் வெளிப் படுத்தினான். அந்தக் கற்பாறைக் கோடுகளே, பின்னர் காலத்தில் ஆதி ஒவியங்களாக மாறின.

Flower Girl
Flower Girl
புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டு, வளைந்து, நெளிந்து, பல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களுடைய வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல் பாடல்களையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள். இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.

உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றன. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன.

Girl with Kolusu
Girl with Kolusu
கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள். இரண்டு கொம்புகளே உடைய மனிதன், மீன், எருது, வரிக்கோடுகள் உடைய புலி, மரம், காண்டாமிருகம், எருமை, காளை, யானை, உடைந்த பானைகள், பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்து உள்ளன. இந்தச் சின்னங்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்து உள்ளன.

Tender Age
Tender Age
உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டு ஓவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப் படுகின்றன. இந்தக் கோடுகளில் ஆதித் தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டு உள்ளது. குகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரி, கோயம்புத்தூர், தருமபுரி, வட ஆர்க்காடு, தென்னார்க்காடு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப் படுகின்றன.

Kitchen Fire
Kitchen Fire
தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப் படுகின்றான். இந்த ஓவியம் வெண்ணிறக் கோட்டு ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. தென்னார்க்காடு மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப் பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டு உள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்பு உடைய மனிதர்கள் காணப் படுகிறார்கள். இந்த ஓவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரையப் பட்டு இருக்கலாம் என்று கணக்கிடுகிறார்கள்.

Flowers in Pond
Flowers in Pond
சேத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றது. ஐயனார் மலையில் எருமை, கரடி, புலி, மீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப் பட்டு உள்ளன. உள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டு உள்ளது. இந்த ஓவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப் படுகின்றது. இவை கீழ்வாலை ஓவியத்தைப் போன்று இருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Seetha with Pigeons
Seetha with Pigeons
கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும், குதிரையும், மனிதர்களும் காணப் படுகின்றன. ஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப் படுகின்றன. யானை, குதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்து இருப்பது போன்ற ஓவியங்களும் காணப் படுகின்றன. இதே மாதிரியான ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியிலும் காணப் படுகின்றன.

யானை, புலி, மான், மயில் போன்ற உயிரினங்களில் அமர்ந்த நிலையில் உள்ளனர். இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றது. இந்த ஓவியங்கள் 2300 ஆண்டுகள் பழமையானவை. இவை போல் ஆலம்பாடி, பதியாண்டாள், கொல்லூர், மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப் படுகின்றன.






Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-