http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown October 02, 2014


சரோஜினி நாயுடு -  பாரதீய கோகிலா

சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு பிரபலமான குழந்தை ஞானி. புகழ்பெற்ற கவிஞர். பிரபலமான சுதந்திர போராட்ட வீரர். அவருடைய காலத்தில் சிறந்த ஒரு பேச்சாளர். ‘பாரதீய கோகிலா’ என்றும், ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றும் எல்லோராலும் புகழாரம் செய்யப் பட்டவர். 

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும், இந்தியாவின் (உத்தரப் பிரதேச மாநிலத்தின்) முதல் பெண் மாநில ஆளுனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அவருடைய பிறந்த நாளே, ‘மகளிர் தினமாக’ இந்தியா முழுவதும் இப்போது கொண்டாடப் பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களுள் ஒருவராகத் திகழும் சரோஜினி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாறு வருகிறது. படியுங்கள். நம் பிள்ளைகளைடம் அவரைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள். இப்படி எல்லாம் நல்ல அழகான அற்புதமான இந்தியப் பெண்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

பிறப்பு: பிப்ரவரி 13, 1879
பிறப்பிடம்: ஹைதராபாத்
இறப்பு: மார்ச் 2, 1949
தொழில்: கவிஞர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பேச்சாளர், ஆளுநர்
நாட்டுரிமை: இந்தியா  

பிறப்பு

ஹைதராபாத்தில் (ஆந்திரா) ஒரு வங்காளிப் பிராமணர் குடும்பத்தில் மூத்தப் பெண்ணாக, பிப்ரவரி 13, 1879 அன்று பிறந்தார். அவரது தந்தை அகோரநாத் சட்டோபாத்யாயா  என்பவர் ஒரு விஞ்ஞானி. ஒரு கல்வியாளர், ஒரு தத்துவஞானி.

சட்டோபாத்யாயா ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியின் நிறுவனர். வெளிநாட்டுப் படிப்பு முடிந்து தாயகம் திரும்பிய அகோரநாத், ஹைதராபாத் நிஜாம் மன்னர் ஆதரவுடன் ஒரு கல்லூரியைத் தொடங்கி அதன் முதல்வரானார். அந்தக் கல்லூரி பின்னாளில் நிஜாம் கல்லூரி ஆனது.

ஆண்களுக்கு நிகராகப் பெண்களும், கல்வி அறிவு பெற வேண்டும், எல்லாத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மற்றும் ஒரு மகளிர் கல்லூரியையும் நிறுவினார்.

சரோஜினி நாயுடுவின், தாயார் பரத சுந்தரி தேவி ஒரு பெண் கவிஞர். வங்காள மொழியில் பாடல்கள் இயற்றுவதில் வல்லவர், இனிய குரலில் பாடக் கூடியவர். 

எட்டு உடன்பிறப்புகளில் மூத்தவராகப் பிறந்தவர் சரோஜினி நாயுடு. அவருடைய சகோதரர்களுள் ஒருவரான பிரேந்திரநாத் ஒரு புரட்சியாளர். அவரது மற்றொரு சகோதரரான ஹரிந்திரநாத் ஒரு கவிஞர், நாடகக் கலைஞர், நடிகர்.

ஆரம்ப காலக் கல்வி

சரோஜினிதேவி  நாயுடு, இளமையில் இருந்தே அறிவுக் கூர்மை மிக்க மாணவியாக விளங்கினார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், வங்காளி, பாரசீக மொழிகளில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்தார். தனது பன்னிரண்டு வயதில், சென்னை பல்கலைக்கழகத்தின் மெட்ரிக் தேர்வில் முதலிடத்தில் தேர்ச்சி அடைந்து அனைத்து இந்திய ரீதியில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.. 

சரோஜினிதேவி பள்ளியில் சிறந்த மாணவியாக விளங்கினார்.  சரோஜினிக்குத் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு படிப்பு பாதிக்கப் பட்டது. 

அவருடைய தந்தை, அவரை ஒரு கணிதமேதையாகவோ அல்லது ஒரு விஞ்ஞானியாகவோ ஆக்க விரும்பினார். ஆனால் சரோஜினி நாயுடு அவர்களுக்குக் கவிதை எழுதுவதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே, அவர் ஆங்கிலக் கவிதைகளை எழுதத் தொடங்கினார். 'ஏரியின் அழகி' என்னும் தலைப்பில் 1300 அடிகள் கொண்ட முதல் கவிதையை படைத்தார்.

கவிதைகள் மீது பற்று  

சரோஜினி நாயுடு, தன்னுடைய படிப்பில் சிறிது இடைவெளி விட்டு, பன் மொழி நூல்களைப் படித்தார். பல மொழிகளில் பல கவிதைகள் எழுதினார். அவரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகையும் வழங்கினார். 

தனது 16 வது வயதில், சரோஜினி நாயுடு இங்கிலாந்து சென்று, லண்டனில் உள்ள கிங் கல்லூரியில் படித்தார். பின்னர், கேம்பிரிட்ஜில் உள்ள கிர்டன் கல்லூரியிலும் மேல்கல்வி பயின்றார்.  அங்கு அவர், சமகாலத்தில் புகழ்பெற்ற மேதைகளான ‘ஆர்தர் சைமன்’ என்பவரையும், எட்மண்ட் காஸ் என்பவரையும் சந்தித்தார். அவர்களுடம் நட்பு கொண்டார். ஆங்கிலக் கவிதை வளத்தைப் பெருக்கிக் கொண்டார்.

சரோஜினி நாயுடு தன் கவிதைகளில் இந்தியாவின் கருப்பொருள்களான – பெரிய மலைகள், அழகான ஆறுகள், உயர்ந்த கோயில்கள், சமூக சூழல்கள் போன்றவற்றைப் பின்னியே எழுதி வந்தார். தற்கால இந்திய வாழ்க்கை நிகழ்வுகளையும் தனது கவிதைகளில் சித்தரித்தார். 

சரோஜினி நாயுடு படைப்புகளான “தி கோல்டன் திரெஷோல்டு (1905)”, “தி பார்ட் ஆஃப் டைம் (1912)”, “தி ப்ரோகேன் விங் (1912)” உலகப் புகழ்பெற்ரவை. இந்திய  வாசகர்களை மட்டும் இல்லை.ஆங்கிலேயர்களையும் பெரிதும் ஈர்த்தது.

இல்லற வாழ்க்கை  

சரோஜினி நாயுடு, தனது பதினைந்தாவது வயதில், டாக்டர் கோவிந்தராஜுலு நாயுடு என்பவரைச் சந்தித்தார். அவரைக் காதலிக்கவும் தொடங்கினார். தொழில்ரீதியாக கோவிந்தராஜுலு ஒரு மருத்துவர்.

19-வது வயதில் சரோஜினி நாயுடு, தனது உயர்ப் படிப்புகளை முடித்துக் கொண்டார். உள் சாதி திருமணம் அனுமதிக்கப்படாத அந்தக் காலக் கட்டத்தில், டாக்டர் கோவிந்தராஜுலுவைத் திருமணம் செய்து கொண்டார். அது ஒரு புரட்சிகர நடவடிக்கை. இருந்தாலும், சரோஜினியின் தந்தை த மகளின் முயற்சிக்கு முழுமையான ஆதரவு வழங்கினார். 

சரோஜினி நாயுடுக்கு ஒரு மகிழ்ச்சியான இனிமையான மணவாழ்வு அமைந்தது. அதன் அடையாளமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஜெயசூர்யா,  பத்மஜ், ரந்தீர், கடைக்குட்டிப் பெண் லீலாமணி.

இந்திய தேசிய இயக்கத்தில் சரோஜினியின் பங்கு

1905-இல், வங்கப் பிரிவினை எழுந்தது. அதைத் தொடர்ந்து சரோஜினி நாயுடு, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். இதன் மூலமாக, அவருக்கு கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநா தாகூர், முஹம்மது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், சி.பி.ராமசுவாமி ஐயர், காந்திஜி, ஜவஹர்லால் நேரு போன்ற முக்கிய தலைவர்களுடன் நட்பு ஏற்பட்டது. 

அவர் இந்தியப் பெண்களைச் சமையல் அறையில் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களை விழித்து எழச் செய்தார். பெண்களுக்கான உரிமைகள் கிடைக்கக் கோரி, நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டார். 

பெண்களுக்கான சுயமரியாதை அவசியம் என்பதை இந்தியப் பெண்களிடம் உணர வைத்தார். அடுப்பாங்கரைப் பெண்கள் அடுப்பாங்கரையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று பெண்களின் உரிமைகளுக்காக தெரு ஆர்ப்பாட்டங்களிலும் இறங்கினார். இரண்டு முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். 

வெளியே வந்ததும் மீண்டும் பெண்ணுரிமைப் போராட்டம். மீண்டும் கைது. இப்படியே அவருடைய வாழ்க்கை ஓடியது. சரோஜினி நாயுடு உலகப் பெண்களின் உரிமைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தை கொண்டு வந்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

சரோஜினி ஆற்றிய பணிகள்

சரோஜினி நாயுடு பெண்ணுரிமை போராட்டங்களில் ஈடுபட்டாலும் அவர் நன்கு படித்தவர் என்பதை பிரிட்டிஷ் அரசாங்கம் நன்கு அறிந்து வைத்து இருந்தது. ஆக, 1919-ஆம் ஆண்டு ஜுலை  மாதம், இங்கிலாந்திற்கான ஹோம் ரூல் லீக்கின் தூதராக நியமிக்கப் பட்டார். 

அங்கே லண்டனுக்குப் போன சரோஜினி நாயுடு சும்மா இல்லை. பிரிட்டிஷ் பெண்களைக் கூட்டி வைத்துக் கொண்டு பெண்ணுரிமை ‘லெக்சர்’ செய்ய ஆரம்பித்து விட்டார். அதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் சும்மா இருக்குமா. போதும் தாயே நீ அங்கேயே இருந்துக்கோ என்று சொல்லி ஓர் ஆண்டிற்குள் இந்தியாவிற்கே திருப்பி அனுப்பி வைத்தது.

1919 ஆம் ஆண்டு, ஆங்கிலேய அரசாங்கம் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. ‘விழிப்புணர்வு ஆவணங்களை வைத்து இருப்பது குற்றமாகக் கருதப்படும்’ எனும் ‘ரௌலெட்’ சட்டம். இந்தச் சட்டத்தை எதிர்த்து மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். 

இந்த இயக்கத்தில் பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து, முதலில் புரட்சிக் கொடியைத் தூக்கியவர் சரோஜினி நாயுடு தான்.

1924 ஆம் ஆண்டு, கிழக்கு ஆப்ரிக்க இந்திய காங்கிரஸில் பங்கேற்ற இரண்டு இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களுள் சரோஜினி நாயுடுவும் ஒருவராவார்.

சரோஜினி நாயுடு, 1925-இல் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்கிற பெருமை இவரையே சேரும்.

1925-இல், ரௌலெட் சட்டமறுப்பு இயக்கத்தில் தீவிரம் காட்டி போராட்டத்தில் களம் இறங்கிய சரோஜினி, காந்திஜி மற்றும் பல தலைவர்களுடன் கைது செய்யப் பட்டார். 

பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், காந்திஜியுடன் ஜனவரி 31, 1931 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப் பட்டார். அடுத்து பத்து ஆண்டுகள் அமைதியாக இருந்தார். 1942ல், “வெள்ளையனே வெளியேறு. இந்தியா எங்கள் நாடு” எனும் இயக்கத்தின் போது சரோஜினி நாயுடு மீண்டும் கைது செய்யப் பட்டார். 

காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது, காந்திஜியுடன் ஓர் அன்பான பாசமான உறவு ஏற்பட்டது. காந்திஜி அவரைச் செல்லமாக “மிக்கி மவுஸ்” என்றே அழைத்தார்.

ஆகஸ்ட் 15,  1947ல், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சரோஜினி நாயுடு, உத்தர பிரதேச ஆளுநர் ஆனார். இவர் தான் ‘சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர்’. முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று மறுத்து விட்டார். என்ற பெருமையத் தட்டிச் சென்ற முதல் இந்திய பெண்மணியும் ஆவார்.

இறப்பு

சரோஜினி நாயுடு அவர்கள், மார்ச் 2, 1949 ஆம் ஆண்டில், மாரடைப்பால் தனது அலுவலகத்திலேயே இறந்து போனார். இந்த உலகில் எத்தனையோ பெண்கள் வந்தார்கள். அடுக்களையிலேயே காலத்தைக் கழித்து, கணவனுக்கப் பிள்ளைப் பெற்றுக் கொடுக்கும்  மெஷினாகவே மாறிப் போய் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒரு சில பெண்கள் தான்பெண்களாகவே வாழ்ந்தார்கள். அவர்களிில் ஒருவர்தான் சரோஜினி நாயுடு.

காலவரிசை

1879: பிப்ரவரி 13, 1879-இல், ஹைதராபாத்தில் பிறந்தார்.

1905:  வங்க பிரிவினை போது, இந்திய தேசிய இயக்கத்தில் சேர்ந்தார்.

1925: காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925: சிறையில் அடைக்கப்பட்டார்.

1931: காந்திஜியுடன் ஜனவரி 31, 1931-இல் விடுதலை

1942: “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கைது.

1947: உத்தர பிரதேச ஆளுநர் பதவி.

1949: மார்ச் 2, 1949-இல், மாரடைப்பால் இறந்தார்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-