http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown July 15, 2014


அண்மைய ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. இவ்வாண்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு இலக்கத்து ஐயாயிரத்தையும் தாண்டி விட்டது என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.

புதிய எழுச்சியை நோக்கித் தமிழ்ப் பள்ளிகள் முன்னேறி வரும் வேளையில், தம்முடைய மகளைத் தமிழ்ப் பள்ளியில் பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார் அரசியல் மாண்புமிகு துணையமைச்சர் டத்தோ சரவணன். 

ஒரு தமிழர் என்ற முறையில் தன்னுடைய குழந்தையைத் தமிழ்ப் பள்ளியில் பதிய வேண்டியது துணையமைச்சர் அவர்களின் கடமைதான். ஆனாலும், பதவி, பணம், அதிகாரம் என உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட்ட தமிழர்கள் தமிழ்ப் பள்ளிகளை ஏரெடுத்தும் பார்ப்பது இல்லை.

அவ்வளவு ஏன்? எதோ ஒரு சிறு வணிகம் செய்து கையில் நாலு காசு பணம் சேர்ந்ததும் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மற்ற மொழிப் பள்ளிகளுக்குப் படையெடுக்கும் தமிழ்ப் பெற்றோர்கள் இன்று பெருகிப் போய் விட்டனர். இப்படியொரு இக்கட்டான நிலையில், பிறந்த இனத்திற்கும் தாய்மொழிக்கும் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்து செயல்பட்டிருக்கும் டத்தோ சரவணனைப் பாராட்டுவதில் தவறில்லை என நினைத்து தமிழுயிர் தனது மனமார்ந்தப் பாராட்டுதலை மகிழ்வோடு தெரிவிக்கின்றது.

சில அரசியலாளர்கள் போல பேச்சளவில் மட்டும் இல்லாமல் உண்மையாகவே செயலிலும் தன்னுடைய தாய்மொழி உணர்வை மெய்ப்பித்துள்ளார் மாண்புமிகு துணையமைச்சர். இவருடைய இச்செயல், மற்றவர்களுக்கு முன்மாதியாகவும் துண்டுகோளாகவும் அமைந்திருக்கிறது.

மேலும், மாண்புமிகு டத்தோ சரவணனின் மொழிப்பற்றும் மொழியின் மீதான சமூகக் கடப்பாடும் மற்றைய தலைவர்களுக்கும் வேண்டும். இவருடைய இந்தச் செயலானது அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், கல்வியாளர்கள், செல்வந்தர்கள், தொழில்முனைவர்கள், வணிகர்கள், உயர்நிலைப் பணியாளர்கள் என உயர்ந்த நிலையில் இருக்கின்ற தமிழர்களுக்குப் புதிய வேகத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என தமிழுயிர் நம்புகிறது.

தமிழ்ப்பள்ளிகள் தரமுயர்ந்து வருகின்றன; தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் மேடைகளில் பொதுமக்களை நோக்கி முழங்கிவரும் அரசியல் தலைவர்கள் முதலில் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிகளில் சேர்க்க வேண்டும். அதன் பிறகு, தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப்பள்ளிகளை நோக்கிப் படையெடுப்பார்கள் என்பது திண்ணம்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-