http://datuksaravanan.blogspot.com/2014/10/1.html

சிறப்பு பதிவு

Posted by : Unknown June 28, 2014

இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மிகப் பயங்கரமாக இருக்கிறது. நினைத்துப் பார்த்தால் மனம் தடுமாறுகிறது. ஒரு பெண்ணை வன்புணர்ந்து, அதன் பிறகு அந்தப் பெண்ணை அடித்துக் கொல்வது; அடையாளம் தெரியாத அளவுக்கு உடலை எரித்துப் போடுவது; உயிரற்ற உடலைத் தூக்கில் தொங்கப் போடுவது என்று இப்படி நிறைய வக்கிரமங்கள் வருகின்றன. 

பாலியல் தொல்லை

இவற்றை எல்லாம் வெறும் செய்தியாகப் படித்துப் பார்த்தால், அவை ஒன்றும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத்  தெரியவில்லை. ஆனால், பாதிக்கப் பட்ட ஒரு பெண் , நம் சொந்தக் கார பெண்ணாக இருந்தால் நிலைமையே வேறு. நம்முடைய நெஞ்சுக்குள் ஒரு பெரிய அணுகுண்டைத் தூக்கிப் போட்டது மாதிரி ஏற்படும்.

இவை எல்லாம், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலும் டில்லியிலும்தான் நடக்கின்றன என்று நினைக்க வேண்டாம். சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. தமிழ்நாட்டின் பெருந்துறையில் ஒரு பெண் போலீஸ்காரருக்கு லிப்ட் கொடுப்பதாக ஒருவன் அழைத்துச் சென்றான். அவரை நடுக் காட்டில் கற்பழித்துவிட்டு, அப்படியே அவளுடைய உடலை எரித்து விட்டுப் போய் இருக்கிறான் ஒருவன். 


ஹரியானாவில் அதிகமான வன் தொல்லைகள்

ஒரு போலீஸ்காரப் பெண்ணுக்கு அந்த நிலைமை என்றால் மற்றவர்களுக்கு எப்படி. இன்னொரு சம்பவத்தில், தமிழ்நாடு சத்தியமங்கலத்தில் ஒரு நடுத்தர வயது பெண்ணை வன்புணர்ந்துவிட்டு, அவளுடைய தலையில் ஒரு கல்லைப் போட்டு நசுக்கிக் விட்டுப் போய் இருக்கிறான் இன்னும் ஒருவன்.

இந்தச் சம்பவங்களில் வயது என்பது தடையாக அமையவில்லை. ஐந்து வயது சிறுமி, பதினைந்து வயது பள்ளிப் பருவப் பெண், முப்பது வயதுப் பெண், எழுபது வயது கிழவி என்று யாருமே தப்பிப் போனது இல்லை. அவள் ஒரு பெண்ணாக இருந்தால் போதும். அவ்வளவுதான். 


பெண்கள் பாவப் பட்ட ஜென்மங்களா

அவள் ஒரு சிறுமியாக இருந்தாலும் சரி. இல்லை கிழவியாக இருந்தாலும் சரி. அவள் சகாரா பாலைவனத்தில் இருந்தாலும் சரி. இல்லை வட துருவத்தில் வாழ்ந்தாலும் சரி. ஒரு பெண்ணாகப் பட்டால் போதும்.

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பெண்களை தூக்கில் தொங்க விட்டது பற்றிய செய்தி. அந்தச் செய்தி வந்து அடங்குவதற்குள் மேகாலயாவில் இன்னொரு செய்தி. ஒரு பெண்ணின் குழந்தைகளையும் அவளுடைய கணவனையும் வீட்டுக்குள் பூட்டி விட்டு, இவளைப் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். அவள் ஒத்துழைக்க மறுத்து இருக்கிறாள். 


நடந்ததை மறக்க முடியவில்லை

தலையிலேயே சுட்டு இருக்கிறார்கள். நடந்த சம்பவத்தை அந்தக் குழந்தைகள் பார்த்து இருக்கிறார்கள். சாகும் வரைக்கும் அந்தக் குழந்தைகள் அதை மறக்குமா?

இவை எல்லாம் சாதாரணச் செய்திகள். இது மாதிரி நிறைய நிகழ்ச்சிகளைப் பாதிக்கப் பட்டவர்களே மறைத்து விடுகிறார்கள். குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதை விடவும் இந்தக் கறையை மறைப்பதுதான் முக்கியம் என அவர்கள் நினைக்கிறார்கள். அதைத் தானே நம் சமூகமும் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. ‘சீரழிஞ்சு வந்து நிக்கிறாளே. 


ஹரியானாவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்

இவளுக்கு இனி யார் வாழ்வு கொடுப்பார்கள்?’ என்கிற மனநிலை. இதையும் மீறி பாதிக்கப் பட்டவர்கள் வெளியில் வந்தாலும் காவல் துறையும் அதிகார வர்க்கமும் செய்திகளைத் திரித்து அமுக்கி விடுவதிலேயே முதன்மையாக இருக்கின்றன.

பெங்களூரில் வசிக்கும் ஓர் ஈரான் நாட்டுப் பெண்ணின் வீட்டை யாரோ தட்டி இருக்கிறார்கள். அவள் திறந்து விசாரித்த போது, வெளியில் நின்று இருந்தவன் ‘கூரியர் வந்திருக்கு’ என்று இருக்கிறான். ‘வாய்ப்பு இல்லையே’ என்று அவள் சொல்ல முயற்சிப்பதற்குள் கீழே தள்ளி, கத்தியைக் கழுத்துக்கு நேராக வைத்து இருக்கிறான். 


தூக்கில் போடப்பட்ட இரு மாணவிகள்

கத்தியைக் காட்டிய படியே அவன் பேண்ட் ஜிப்பைக் கழட்டி இருக்கிறான். சுதாரித்தவள் அவனது தொடைகளுக்கு இடையில் உதைத்துவிட்டு வெளியே ஓடி வந்து கத்தி இருக்கிறாள். அக்கம் பக்கத்தவர்கள் துரத்திய போது, கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டானாம். 

அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்து இருக்கிறார்கள். அவன் மீது ‘திருட்டு கேஸ்’ பதிவு செய்து இருக்கிறார்கள். அவ்வலவுதான். ‘கற்பழிப்பு முயற்சி’ என்று பதிவு செய்தால், போலீஸுக்கு நிறைய பிரச்னைகள் வரும். அதனால் திருட்டு முயற்சி கேஸ். பாவம் போலீஸ்காரர்கள்.




பெங்களூரை விடுவோம். கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பரபரப்பாக பேசப்பட்ட காரைக்கால் கற்பழிப்பு வழக்கு. தெரியும் தானே. என்ன ஆனது? இப்போதைக்கு அந்தச் செய்திதான் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. யோசித்துப் பார்த்தால் இன்னும் பத்து வழக்குகளையாவது நினைவுக்கு கொண்டு வர முடியும். 




ஊடகங்களில் வெளியாகும் செய்திகளே கடும் அதிர்ச்சியைத் தருகின்றன. ஊடக வெளிச்சத்திற்கு வராத பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். அவை எல்லாம் எந்தவித சத்தமும் இல்லாமல் தினம் தோறும் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. 

பேருந்தில் உரசுவதைப் பற்றியும் பொது இடங்களில் கைகள் நீள்வதைப் பற்றியும் கட்டுரைகள் வருவதில்லை. பெண்குழந்தைகள் மீதான பாலியல் பலாத்காரங்களைப் பற்றிய பெரிய அளவிலான விவாதங்கள் நடப்பதும் இல்லை. ‘நம் வீட்டில் நடக்காத வரைக்கும் சரிதான்’ என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம்.

Leave a Reply

உங்கள் கருத்துகள் வரவேற்கப் படுகின்றன.

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © டத்தோ எம். சரவணன் - Date A Live - Powered by Blogger - வரைகலை தயாரிப்பு: மலாக்கா முத்துக்கிருஷ்ணன் +06 012 9767 462
-